×

கலப்பட ஜவ்வரிசி ஆலைகளுக்கு எதிராக சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

சேலம்: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கிலிருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் 300க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் போன்றவை சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் மூலம் ஆலை உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் வடமாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில ஆலை உரிமையாளர்கள் கிழங்கு மாவில் சோயா மாவை கலந்து கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு வட மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தரமான ஜவ்வரிசி தயாரிக்கப்படும் ஆலை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆலை உரிமையாளர்கள் ஒரு குழு அமைத்து இந்த கலப்பட ஜவ்வரிசியை தடுக்க வேண்டுமென அவர்கள் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு குழு அமைத்து கலப்பட லாரிகளை மடக்கி பிடித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தான் இன்று சேலம் அருகே ஒரு லாரியை மடக்கி பிடித்து அதில் கலப்பட ஜவ்வரிசி வட மாநிலங்களுக்கு ஏற்றி செல்வதாக தகவல் அறிந்து பின்னர் அந்த லாரியை கைப்பற்றியுள்ளனர். பிறகு கலப்பட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் அந்த லாரியை அடாவடி தனமாக எடுத்து சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குரங்குச்சாவடி பகுதியில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த காவல்துறையினர் இங்கு வந்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் மத்தியில் சமாதான பேச்சு நடத்தி தற்போது அப்புறப்படுத்தியுள்ளனர். ஜவ்வரிசி உற்பத்தியாளர்களை பொறுத்தவரை கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் அந்த ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Salem-Bangalore National Highway , Salem, Bangalore, Roadblock
× RELATED பாஜக சாலை மறியல்