விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரம்; 2099 கி.மீ பயணம் 41 தொகுதிகளில் பிரச்சாரம் முடிந்தது: திமுக அறிவிப்பு

சென்னை : விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரப்பயணத்தில் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வரும் திமுக முன்னணியினர் கடந்த 11 நாட்களாக உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட 7 தலைவர்கள் 232 பொதுக்கூட்டங்கள் மூலம் 2099 கி.மீ., பயணம் செய்து, 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 59,140 மக்களுடன் நேரடி சந்திப்பை நிகழ்த்தியுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“திமுக தலைவர் ஸ்டாலினின் செய்தியைத் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரப் பயணத்தை, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னையில் அறிவித்தார்.

இதன்படி, கட்சியின் சேர்ந்த 15 முன்னணியினர், திமுக தலைவர் ஸ்டாலின் தூதுவர்களாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 75 நாட்கள், 15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடுவார்கள்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தனது பரப்புரைப் பயணத்தைத் தொடங்கினார்.

அடுத்ததாக, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியில் தனது பரப்புரையைத் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறார்.

அதேபோல், கழக கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் சபாபதி மோகன் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், திண்டுக்கல் ஐ.லியோனி திருநெல்வேலி மாவட்டத்திலும் தங்களது பரப்புரையைத் தொடங்கினர். சபாபதி மோகன் அவர்கள் முதல் நாளில் 74 கி.மீ பயணித்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, பொதுமக்களுடன் சமபந்தி விருந்திலும் பங்கேற்றார். திண்டுக்கல் ஐ.லியோனி 90 கி.மீ., பயணித்து ஆயிரக்கணக்கான மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி வருகிறார்.

துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதியிலும், அந்தியூர் செல்வராஜ் அவிநாசிசட்டப்பேரவை தொகுதியிலும் தங்களது பரப்புரையைத் தொடங்கினர். ஐ.பெரியசாமி 35 கி.மீ., பயணம் மேற்கொண்டு விவசாயிகளையும் மக்களையும் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அந்தியூர் செல்வராஜ் 75 கி.மீ., பயணித்து, அருந்ததியர் சமூக மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர், சேவூர் பகுதியில் உள்ள மக்களிடம் அவர் பேசியபோது, அப்பகுதியில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவிற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தலை எதிர்க்கும் தங்களது கோரிக்கையை அவரிடம் எடுத்து வைத்தனர்.

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்றைய முன்தினம் சைதாப்பேட்டைப் பகுதியில் தனது பரப்புரையைத் தொடங்கி, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதிவாசிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

இதுவரை கடந்த 11 நாட்களில், ஏழு கழக முன்னணியினர் 2099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர்”.

இவ்வாறு திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>