போராடும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு கருத்து... இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என கனடா தூதரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி :  விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிப்பதை தொடர்ந்து டெல்லியில் உள்ள கனடா தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில்  இன்றோடு 9-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த சூழலில், அண்மையில்,  டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து  கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருந்தார். சிக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் 551-வது பிறந்த நாள் கனடாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். மேலும், விவசாயிகளின் வலிகளை உணர்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு இந்தியாவிடம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார் .கனடா பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கனடா பிரதமரின் கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில், கனடா நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.  தொடர்ந்து கனடா தூதர்  நதிர் படேலை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிப்பதை ஏற்கமுடியாது என்றும் இத்தகைய கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்தால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: