சொத்து குவிப்பு வழக்கில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா, விடுதலை கோரி 3 நினைவூட்டல் கடிதம் : கர்நாடக சிறை நிர்வாகம் மவுனம்

பெங்களூரு, :சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி அவரது தரப்பில் சிறை நிர்வாகத்திற்கு 3 நினைவூட்டல் கடிதம் கொடுத்தும் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பது அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கும் அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா தீர்ப்பு வழங்கினார். இதில், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளியாக உறுதி செய்ததார். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்து உத்தரவிட்டது. அதை தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி, குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 45 மாதங்களாக சிறையில் உள்ள குற்றவாளிகளின் தண்டனை காலம், வரும் 2021 பிப்ரவரி மாதம் முடிகிறது. அவர்கள், நீதிமன்றம் விதித்திருந்த அபராத தொகையை செலுத்தாமல் இருந்தனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகைக்கான வங்கி வரையோலை (டிடியை) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம், கடந்த 17ம் தேதி வக்கீல் சி.முத்துகுமார் செலுத்தினார். மற்றொரு குற்றவாளியான இளவரசிக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான டிடியை வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் செலுத்தினர்.

இதே வழக்கில் சசிகலா ஏற்கனவே 48 நாட்கள் சிறையில் இருந்ததை கழிக்க வேண்டும், அவர் சிறையில் இருந்தபோது கன்னட மொழி கற்று கொண்டுள்ளார், இதை நன்னடத்தையாக கருதி தண்டனை காலம் முடிவதற்கு முன் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில சிறை துறை டிஜிபி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த மாதம் 19ம் தேதி வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் மனு கொடுத்தனர்.

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், கடந்த 27ம் தேதி 2வது மனு கொடுத்தனர். அதன் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் கடந்த 1ம் தேதி 3வது நினைவூட்டல் மனு கொடுத்துள்ளனர். சசிகலாவும், தன்னை விடுதலை செய்யும்படி தனிப்பட்ட முறையில் சிறை முதன்மை கண்காணிப்பாளரிடம் மனு ெகாடுத்துள்ளார். இதுவரை எந்த பதிலும் மாநில சிறை நிர்வாகத்திடம் இருந்து வராமல் இருப்பது வக்கீல்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையில் சசிகலாவை விடுதலை செய்வது தொடர்பாக கர்நாடக மாநில சிறை துறை டிஜிபி அலோக்மோகன், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அதில் எடுத்த முடிவுகள் குறித்த விவரங்களை மாநில உள்துறை அமைச்சக செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரிய வருகிறது. மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் இருந்து எந்த உத்தரவும் வராமல் இருப்பதால் உள்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல், சிறை நிர்வாகமும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருவதாக தெரிகிறது.

நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை காலம் முடிவதற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள் மட்டுமே இருப்பதால், கர்நாடக சிறை துறை எந்த நேரத்திலும் விடுதலை செய்யும் என்பதால், சசிகலாவை அழைத்து செல்வதற்கு வாகன வசதி உள்பட அனைத்தும் தயார் நிலையில் கர்நாடகா-தமிழக எல்லையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வைத்துள்ளனர். சில வக்கீல்கள் பரப்பன அக்ரஹாரா சிறையை ஒட்டியுள்ள பகுதியில் இருக்கும் லாட்ஜில் தங்கியுள்ளனர்.

இந்த வாரம் இல்லை என்றாலும் வரும் 10ம் தேதிக்குள் சசிகலா விடுதலையாக 100 சதவீதம் வாய்ப்புள்ளதாக அவரது வக்கீல்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இருப்பினும் சசிகலா விடுதலை தொடர்பாக மாநில உள்துறை அமைச்சக வட்டாரத்தில் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் மறைமுகமான உத்தரவு வந்துள்ளதால் மாநில உள்துறை அமைச்சகம் மவுனம் காப்பதாக தெரியவருகிறது

Related Stories:

>