இன்னும் சில வாரங்களில் பாதுகாப்பான, விலை குறைந்த கொரோனா தடுப்பூசி தயார்.. முன்களப் பணியாளர்கள், முதியோர்களுக்கே முன்னுரிமை : பிரதமர் மோடி அறிவிப்பு!!

டெல்லி : இந்தியாவில் குறைந்த விலையில், பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி தலைமையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத், ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‘உலகம் முழுவதும் 58 கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணி நடக்கிறது. கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது. தடுப்பூசி செலுத்துவதில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் நிச்சயமாக கிடைக்கும். மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாராகிவிடும்.மருத்துவ வல்லுநர்கள் ஒப்புதல் தெரிவித்த உடன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுவது துவங்கும்.சுகாதாரப்  பணியாளர்கள், முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் விநோயோகிக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும்.மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க சிறப்பான கட்டமைப்பு உள்ளது.கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுடன் ஆலோசித்து வருகிறது, என்றார்.

Related Stories:

>