×

புழல் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு..பிற்பகல் 3 மணிக்கு 500 கனஅடி நீர் திறப்பு..:பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பிற்பகல் 3 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் போன்ற சென்னையின் முக்கிய குடிநீர் ஏரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தண்ணீரின் வரத்துக்கு ஏற்ப திறக்கப்பட்டு வருகிறது

அதன்படி புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,373 கனஅடியாக உள்ளதால், வினாடிக்கு 500 கனஅடி நீரை திறக்க உள்ளனர். இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 21.2 அடியில், 19.7 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நாரவாரிக்குப்பம், வடகரை, பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கால்வாய் பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து பூண்டி நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான 35 அடியில் 34.11 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 2,450 கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 18.86 அடியில் 14.60 அடியை எட்டியது. நீர்வரத்து 694 கனஅடியாக உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு காலை நிலவரப்படி 573 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததன் காரணமாக உபரிநீர் வெளியேற்றம் விநாடிக்கு 3,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.



Tags : Phuhal Lake ,water opening ,Public , Water level of Phuhal Lake continues to rise..500 cubic feet of water opening at 3 pm ..: Public advised to be safe
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...