×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் கடத்தல்காரர்கள் தோண்டிய மரண குழிகளால் பலியாகும் உயிர்கள்

வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு மற்றும் ஆறு, நீர்நிலைகளில் மூழ்கி பலியாகும் சம்பவம் பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.நிவர் புயல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதேபோல் ஆந்திராவிலும் கனமழை பெய்தது. குறிப்பாக வேலூர் மாவட்டத்திலுள்ள பொன்னையாறு, பாலாறு, கவுடன்யமகாநதி, நாகநதி, பேயாறு, அகரம் ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளிலும் அதன் முழு கொள்ளளவில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.

புயலின் தாக்கத்தினால் ஆந்திராவில் பெய்த மழையானது வேலூர் மாவட்ட ஆறுகளிலும் எதிரொலித்து. வெள்ளத்தை இன்னும் வேகப்படுத்தியது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோர்தானா அணையிலிருந்து வெளியேறிய தண்ணீர் குடியாத்தம் நகருக்கு வெள்ளத்தின் உக்கிரத்தை காட்டியது. பொன்னை பகுதியில் 6 மணி நேரத்தில் பெய்த 160 மி.மீ மழை, ஆந்திராவின் கலவகுண்டா அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரும் சேர்ந்து பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. ஒரு தலைமுறையே கண்டிராத வெள்ளத்தை அனைத்து ஆறுகளிலும் காண முடிந்தது.
 பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்தது. பாலாறு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆறுகளில் பொதுமக்கள், ஆர்வத்துடன் வெள்ளத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக வேலூர், விரிஞ்சிபுரம் பாலாறு, குடியாத்தம் கவுன்டன்ய மகாநதி, மோர்தானா அணை, பாலாறு அணைக்கட்டு, பொன்னை தடுப்பணை போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். அப்போது குழந்தைகளுடன் பெற்றோர்கள் நீர்நிலைகளில் இறங்கி செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்கி குளிக்கவும் செய்கின்றனர்.
ஆனால் பாலாறு, பொன்னை ஆறு உள்படபல்வேறு இடங்களில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளையர்களின் கைவரிசையால் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த பள்ளங்களில் மணல் நிரம்பி மரண வாயில்களாக மாறியுள்ளது.

இதையறியாமல் ஆற்றில் இறங்கி குளிக்கும் மக்கள், மண்ணில் புதைந்து பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. வெள்ளம் வந்த கடந்த 7 நாட்களில் மட்டும் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுன்டன்ய மகாநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கடந்த 30ம்தேதி வேடிக்கை பார்த்த நதியா, அவரது மகள்கள் நிவேதா, ஹர்ஷினி ஆகியோர் ஆற்றில் உள்ள பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி பலியாகினர். நேற்று முன்தினம் பள்ளிகொண்டா அருகே கோயில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபரும் நீரில் மூழ்கி இறந்தார்.

அதேபோல் நேற்று ராணிப்ேபட்டை மாவட்டம் சீக்கராஜபுரம் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்களான நவீன், நரேஷ் ஆகியோர் பொன்னையாற்றில் குளிக்க சென்றனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் சரத்குமார் என்பவரை கடந்த 5 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த ரித்திக் (12) என்பவரும் பாலாற்று தண்ணீரில் மூழ்கி இறந்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆற்றில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ெபாதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் ஆர்வம் மிகுதியால் தடையை மீறி ஆபத்தை பற்றி அறியாமல் ஆறுகளில் இறங்கி செல்பி எடுப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் புதைகுழிகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு செயல்படுபவர்களும் உஷாராக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்

தற்போது வடகிழக்கு பருவமழையால் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதனால் நீர்நிலைங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளது. குளியல் போடுவதாக கூறி உயிர்பலி அதிகம் நடக்கிறது. எனவே, குழந்தைகளை நீர் நிலைகள், ஆறுகளில் குளிக்க அழைத்து செல்லும் பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

குழந்தைகளை தனியாக நீர்நிலைகளுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. அதுபோல சுற்றுலா வரும் இளைஞர்கள் மது அருந்தாமல் நீர் நிலைகளில் குளித்தால் உயிர் பலியை தவிர்க்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : sand smugglers ,Vellore ,districts ,Ranipettai ,Tirupati , Vellore: A drowning incident took place at Palaru and rivers in Vellore, Tirupati and Ranipettai districts.
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...