கண்ணமங்கலம் அருகே பாலம் இல்லாததால் மார்பளவு வெள்ளத்தில் சடலத்துடன் கடந்து சென்ற கிராமமக்கள்-தேர்தலை புறக்கணிப்பதாக ஆவேசம்

கண்ணமங்கலம் :  கண்ணமங்கலம் அருகே பாலம் இல்லாததால், மார்பளவு வெள்ளத்தில் சடலத்துடன் பொதுமக்கள் ஆற்றை கடந்து சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே படவேடு ஊராட்சி, கமண்டலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(85). இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது சடலத்தை உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முயன்றனர்.

ஆனால், மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கமண்டல நாகநதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் மார்பளவு வெள்ளம் ஓடுகிறது.  இதனால், சடலத்தை தூக்கிக் கொண்டு ஆபத்தான நிலையில் வெள்ளத்தை கடந்து சென்று அடக்கம் செய்தனர். ஆற்றில் வெள்ளம் ஓடுவதால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க முடிந்தது. பெரும்பாலானோர் ஆற்றங்கரையில் நின்றுவிட்டனர்.

இந்த கிராமத்தில் கமண்டல நாகநதியை கடந்து செல்ல பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக, அதிகாரிகளிடம் பலமுறை மனுவும் அளித்துள்ளார்களாம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கமண்டல நாகநதியின் மற்றொரு புறம் உள்ள மயானத்திற்கு சடலத்தை தூக்கிச் செல்லும் வகையில் சிறுபாலம் கட்டித் தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் சடலங்களை தூக்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே பாலம் அமைக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் வாக்களிக்காமல், புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: