×

ஏரியை போதியளவு ஆழப்படுத்தாததால் மழைநீர் வீணாக வெளியேறும் அவலம்

உளுந்தூர்பேட்டை :  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது மட்டிகை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை பயன்படுத்தி மட்டிகை, வானாம்பட்டு மற்றும் இதனை சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மட்டிகை ஏரி நிரம்பி வந்த நிலையில் நேற்று ஏரியில் இருந்து 2 மதகுகளின் வழியாக மழைநீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இதுகுறித்து இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, ஒவ்வொரு மழையின் போதும் இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறி வருகிறது. முன்கூட்டியே ஏரியை ஆழப்படுத்த வேண்டும், தண்ணீர் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், மதகு உயரத்தை உயர்த்திட வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது பெய்த மழைநீர் அனைத்தும் ஏரியில் போதிய ஆழம் இல்லாததால் தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் மழை பெய்தும் மழைநீர் விவசாயத்துக்கு பயன்படாத நிலை ஏற்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலாவது மட்டிகை ஏரியை போதிய ஆழப்படுத்தி மழைநீரை சேமித்து வைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி வரும் விவசாயிகள் கவலை இன்றி விவசாயம் செய்திட முடியும் என வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.

நேற்று மட்டிகை ஏரியில் இருந்து அதிகளவு தண்ணீர் 2 மதகுகளின் வழியாக வெளியேறி அருகில் இருந்த வாய்க்கால் மற்றும் ஓடைகளின் வழியாக சேந்தநாடு, கிழக்கு மருதூர் ஆற்றுப்படுகையில் சென்று கலந்து வருகிறது. மேலும் ஓடையின் வழியாக சென்ற தண்ணீர் இதனருகில் இருந்த விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி சென்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : lake , Ulundurpettai: Mattikai village is under Thirunavur union near Ulundurpettai in Kallakurichi district.
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு