×

புயல் எச்சரிக்கை எதிரொலி கொடைக்கானலில் போக்குவரத்துக்கு தடை-2வது நாளாக சுற்றுலாத்தலங்கள் மூடல்

கொடைக்கானல் : புயல் எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை நேற்றும் தொடர்ந்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மின்தடையும் ஏற்பட்டது. இரவு நேரத்தில் மலைச்சாலைகளில் மரங்கள் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் மலைச்சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அனைத்து போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலை, கொடைக்கானல் - பழநி சாலை, கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலை ஆகியவற்றில் அனைத்து போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை இருக்கும்’’ என்றார்.

இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் இரண்டாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர்மழை காரணமாக கொடைக்கானல் பகுதி மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

சாலையில் மண்சரிவு

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் கோம்பைக்காடு அருகே தடுப்புச்சுவர் மண்சரிவு ஏற்பட்டு சரிந்து விழுந்தது.

Tags : Kodaikanal , Kodaikanal: Traffic has been banned in Kodaikanal due to storm warning.
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்