ராயக்கோட்டைக்கு விரட்டப்பட்ட யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாம்-விவசாயிகள் அச்சம்

ஒசூர் :  ராயக்கோட்டைக்கு விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் சானமாவு வனத்தில் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சானமாவு வனப்பகுதிக்குள் கடந்த வாரம் வந்து முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப ராயக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. ஆனால், நேற்று அதிகாலை மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு அந்த யானைகள் வந்தன. இதனால் சானமாவு வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சானமாவு வனப்பகுதியில் விளைநிலங்களை சுற்றி, பெரும்பாலான இடங்களில் தொங்கும் சோலார் மின்வேலிகள் பொருத்தி உள்ள நிலையில் பீர்ஜேப்பள்ளி, நாயக்கனப்பள்ளி ஆகிய கிராமப்பகுதிகளில் இன்னும் தொங்கும் மின்சார வேலிகள் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் அந்த வழியாக யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சானமாவு வனப்பகுதி ஒட்டிய விளை நிலப்பகுதிகளில் முழுமையாக தொங்கும் சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: