வாணியம்பாடி அருகே 2 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத பொது கழிப்பிட கம்பிகளை உடைத்து காயலான் கடையில் போடும் வாலிபர்கள்-சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

வாணியம்பாடி:  வாணியம்பாடி அருகே 2 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பிட கம்பிகளை உடைத்து காயலான் கடையில் எடைக்கு போடும் வாலிபர்கள் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள பாலாற்று பகுதிக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி சார்பில் கடந்த 2018ம் ஆண்டு பாரத தூய்மை திட்டத்தின் கீழ் ₹6.80 லட்சம் மதிப்பீட்டில் 6 கழிவறை கொண்ட பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் மின் இணைப்பு, தண்ணீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.  தற்போது, தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் நிரம்பியுள்ளதால் ஆங்கங்கே பள்ளங்கள் ஏற்பட்டு கடந்த வாரம்  ரித்திக்(12) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதனால் பாலாற்று பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று பேரூராட்சி நிர்வாகம் தண்டோரா போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  அப்பகுதியை சேர்ந்த  சில வாலிபர்கள் கிடப்பில் போடப்பட்ட அந்த கழிவறை சுவர்களில் உள்ள இரும்பு கம்பிகளை உடைத்து, அதனை பழைய இரும்பு கடையில் கொடுத்து பணம் வாங்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், தற்போது உயிரிழப்பு நிகழ்வதால் பாலாற்றிற்கு இயற்கை உபாதை கழிக்க செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக அந்த கழிவறையை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: