நடப்பு நிதியாண்டில் ஜிடிபி மைனஸ் 7.5 ஆகக் குறையும்.. வட்டி வீதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

மும்பை : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 6வது இருமாத நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக நீடிக்கும். வட்டி விகிதத்தை மாற்றாமல் நீடிக்க, நிதிக்கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர். பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரெப்போ ரேட் வீதத்தை மார்ச் மாதத்திலிருந்து 115 புள்ளிகளைக் குறைத்துள்ளோம்.

நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருக்கும் என்று கணித்துள்ளோம். முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. 2-வது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று கணித்தோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தப் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். இதற்கு முன் மைனஸ் 9.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனக் கணித்திருந்தோம்.

3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.1 சதவீதமும், கடைசிக் காலாண்டில் 0.7 சதவீதமும் வளர்ச்சி அடையக்கூடும். நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் சாதகமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.2021 நிதியாண்டின் 3வது காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் அளவீடு 6.8 சதவீதமாக இருக்கும்,இவ்வாறு அவர் கூறினார்.ரெப்போ விகிதம் மாற்றப்படாததால் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காது. இது, பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

Related Stories: