×

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் துவங்கும் : முதல்வர் பழனிசாமி பேச்சு

மதுரை, தமிழகம் முழுவதும் 76 கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், கலெக்டர் அலுவலக புதிய கட்டித்தை திறந்தும், பணி நிறைவு பெற்ற 12 திட்டங்களை துவக்கி வைத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதே போல் 76 கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 4,900 மில்லியன் கனஅடி தண்ணீர் குடிநீராக விநியோகிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 7,600 மில்லியன் கனஅடியாக இந்த அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் குழாய் பதிக்கப்பட்டு, 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 7 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும்.

முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் மதுரையில் கூடுதலாக வழங்கப்படும். மதுரை மாநகர் பகுதியில் மட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.976.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை விமானநிலைய ஓடுதள பாதை விரிவாக்க பகுதியில் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை செல்வதால், அந்த சாலையை மாற்றி அமைத்து ஓடுதளப்பாதையின் கீழ் கீழ்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணி துவங்கும்.

கிராமங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ரூ.பல கோடிக்கு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நடந்தாலும், அதற்கான நிதி ஆதாரத்தை பெற்றுள்ளோம். தேசிய அளவில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளோம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் துவங்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 6 இடங்களே கிடைத்தன. இப்போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 313 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் எனது சேலம் மாவட்டத்தில் மட்டுமே 26 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags : hospital ,AIIMS ,Palanisamy ,Jayalalithaa , Jayalalithaa, Rule, AIIMS Hospital, Chief Minister Palanisamy, Speech
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்...