முதல்வர் நிகழ்ச்சிக்காக விதிமுறைகளை மீறி கட்அவுட்,பேனர்கள் வாய்ப்பு.: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு

சென்னை: முதல்வர் நிகழ்ச்சிக்காக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மதுரை சென்ற முதல்வர், அங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரை மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும்  புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தநிலையில், விழாவில் பங்கேற்க வந்த முதல்வருக்கு வரவேற்பு வழங்கும் விதமாக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நகரின் முக்கிய பகுதிகளில் கட்அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை ஆட்சியர் அலுவலகம், கோரிப்பாளையம், செல்லூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வரை வரவேற்க பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கட்அவுட்கள், பேனர்கள் வைப்பது சட்டத்துக்கு புறம்பானது என டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: