ரூ.1295. 76 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்!!!

மதுரை : தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக முதல்வர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை மதுரை சென்ற முதல்வர் பழனிசாமி, அங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரை மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அம்ரூட் திட்டத்தின் கீழ் லோயர்கேம்பில் இருந்து குழாய் மூலம் நாள்தோறும் 125 MLT குடிநீர் விநோயோகிக்கப்படும். மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.1295. 76 கோடியாகும்.   

இதைத் தொடர்ந்து ரூ.33 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரையில் ரூ.69.11 கோடியில் கட்டப்பட்டுள்ள -புதிய கட்டிடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.மேலும் 2,236 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.  மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். அது மட்டுமல்லாது, சிவகங்கை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர், 7,557 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அத்துடன் சிறு, குறு , நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடனும் முதல்வர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.

Related Stories: