பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்குமா? உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு: ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படுமா? என்பது கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று வழங்கும் தீர்ப்பில் உறுதியாகும். தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆயத்த பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் தயாராக வேண்டிய நிலை உள்ளது.  பெங்களூரு மாநகராட்சிக்கு கடந்த 2015ல் தேர்தல் நடந்தது. ஐந்தாண்டு பதவி காலம் கடந்த செப்டம்பர் 17ம் தேதியுடன் முடிந்தது. இதனிடையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 198 வார்டுகளை அதிகப்படுத்தி கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி உருவாக்குவதாக அறிவித்த மாநில அரசு, மாநகராட்சியின் வார்டு எண்ணிக்கையை 225 ஆக உயர்த்தியது. இது தொடர்பாக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் சிறப்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றுள்ளது.

 இதனிடையில் பதவி காலம் முடிந்துள்ள மாநகராட்சிக்கு தற்போதுள்ள வார்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் சிவராஜ் மற்றும் அப்துல் வாஜித் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அம்மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 30ம் தேதி ஒத்தி வைத்தது. அதன்படி அம்மனு 30ம்தேதி விசாரணைக்கு வந்தபோது வக்கீல்கள் ஆஜராகி வாதம் செய்தனர். அதை தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது மாநில அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வக்கீல், ``பெங்களூரு மாநகரம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு இணையான உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் மாநகராட்சியின் எல்லையை தற்ேபாதுள்ள 800 சதுர கி.மீட்டரில் இருந்து 1,300 சதுர கி.மீட்டராக உயர்த்துவதுடன் வார்டுகளின் எண்ணிக்கையும் 198ல் இருந்து 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெருநகர் மாநகராட்சியாக இருப்பதை கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

மாநகராட்சியின் எல்லை மற்றும் வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுவதால், மக்கள் தொகை அடிப்படையில் சாதிவாரி இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடுவது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொண்ட பின், தேர்தல் நடத்த அரசு தயாராகவுள்ளது. அவசர அவசரமாக இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிட்டால், பாதிக்கப்படுபவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவார்கள். அதை தவிர்க்க வேண்டிய நிலைவுள்ளது. ஆகவே மாநகராட்சியின் வார்டு எண்ணிக்கையை உயர்த்தி அரசு எடுத்துள்ள முடிவை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும்” என்றார்.இதற்கு மறுப்பு தெரிவித்து மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ``மாநகராட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வார்டு எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி அமைக்கும் யோசனை அரசுக்கு இருந்திருந்தால், மாநகராட்சி பதவி காலம் முடிவதற்கு முன் தீர்மானத்தை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கலாமே? பதவி காலம் முடிந்த பின், ஏன் வார்டு உயர்த்தும்முடிவு எடுக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.அதை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் பணீந்திரா வாதிடும்போது, ``பதவி காலம் முடிவதற்கு முன் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை செயல்படுத்தும் வகையில் எந்த நேரத்திலும் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராக இருப்பதாக” தெரிவித்தார். இவ்வழக்கு தொடர்பாக மனுதாரர் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் முடிந்ததை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை டிசம்பர் 4ம் தேதி (இன்று) பகல் 2.30 மணிக்கு வழங்குவதாக கூறி விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

பெங்களூரு மாநகராட்சியின் பதவி காலம் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்துள்ள நிலையில், தற்போதுள்ள 198 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிடுமா? அல்லது கிரேட்டர் பெங்களூரு உருவாக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு பச்சைகொடி காட்டுமா? என்பது இன்று தெரியும். ஒருவேளை தற்போதுள்ள வார்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் தயாராக வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: