படகு கவிழ்ந்து விபத்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 6 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி வழங்கினார்

மங்களூரு: கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது என்று அமைச்சர் கோட்டா சீனிவாஸ்பூஜாரி தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கடலில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தலா 6 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``மங்களூரு அருகேவுள்ள அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹6 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.  அதே போல் இது போன்ற சம்பவம் மறுபடியும் நடைபெறாமல் இருக்க கடலோர பகுதிகளில் காவல் படையை பலப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் உயிரிழந்த மீனவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நிவாரணம் தொகையை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சட்ட விதிகளின்படி ₹6 லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்க முடியும். இது தொடர்பாக ஒரு வாரத்தில் பா.ஜ. மாநில தலைவர் நளின்குமார்கட்டீல், எம்.எல்.ஏக்கள் ஆகியோருடன் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து கூடுதலாக ₹4 லட்சம் நிதி உதவி வழங்க கோரிக்கை வைக்கப்படும்” என்றார். உடன் நளின்குமார்கட்டீல், மாவட்ட கலெக்டர் கே.வி. ராஜேந்திரா, எம்.எல்.ஏ. வேதவியாசகாமத் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: