டெல்லி கலவர வழக்கில் கைதான ஜமியா மாணவரை விருந்தினர் மாளிகைக்கு மாற்ற உத்தரவு : தேர்வுக்கு படிக்க ஐகோர்ட் அதிரடி

புதுடெல்லி: டெல்லி கலவர வழக்கில் கைதான ஜமியா மிலியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தேர்வு எழுதுவதற்கு வசதியாக அவரை விருந்தினர் இல்லத்திற்கு மாற்றும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.டெல்லி கலவர வழக்கில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. எனவே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஜாமீன் வழங்குவதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மாணவர்கள் சிறையிலேயே படிப்பை தொடர்கிறார்கள்.

அதே போல ஜமியா மிலியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்கா என்பவரும் கலவர வழக்கில் மே மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது தேர்வுகள் நடந்து வருவதால் தனக்கு 3 நாள் பரோல் தரும்படி அவர் விசாரணை நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தேர்வு எழுத அனுமதி வழங்கியது. ஆனால் மீண்டும் மாலை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து தன்கா உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணை நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தால் தன்னால் படிக்க முடியாது என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் விசாரித்தார்.அப்போது தன்காவின் மனுவை ஏற்றுக்கொண்ட அவர் லாஜ்பத் நகர் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து இன்று, நாளை மற்றும் 7ம் தேதி நடக்கும் தேர்வுகளை எழுத தன்காவுக்கு அவர் அனுமதி வழங்கினார். அப்போது படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் தேவையானவற்றை பயன்படுத்த அவருக்கு அனுமதி வழங்கினார். இதை சிறை சூப்பிரண்டு கண்காணிக்க வேண்டும்.

தினமும் காலை 8.30க்கு ஜமியா பல்கலை தேர்வு மையத்திற்கு தன்காவை கொண்டு சேர்த்து விட்டு, தேர்வு முடிந்ததும் அவரை திரும்ப அழைத்துவர வேண்டியது அவரது பொறுப்பு. தேர்வுகள் எழுதி முடித்தபின்னர் அவரை சிறையில் அடைத்துக்கொள்ளலாம் என்று அவர் உத்தரவிட்டார். மேலும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் போது தினமும் 10 நிமிடம் தனது வக்கீலுடன் தன்கா பேச அவர் அனுமதி வழங்கினார்.

Related Stories: