புதிய கல்பாக்கம் பகுதியில் கடல் அரிப்பு: இறால் பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்தது: விடுமுறையால் உயிர் தப்பிய ஊழியர்கள்

மாமல்லபுரம்: புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பால், இறால் குஞ்சு வளர்ப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் மீனவர் குடியிருப்பு பகுதியில் 900க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடல் சீற்றத்தினால் கடந்த 13 ஆண்டுகளாக கடல் பல அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்து விட்டது. மேலும், இங்கு வாழும் மீனவர்கள் கடல் சீற்றம் மற்றும் மழை காலங்களில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

இதையடுத்து மீனவர்கள், கடல் அரிப்பு ஏற்படாதவாறு தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்  தமிழக அரசுக்கும், மீன்வளத்துறைக்கும் பலமுறை என கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் இறால் குஞ்சுகளை வளர்க்கும் தனியார் பண்ணை ெதாடங்கப்பட்டது. இங்கு, 20க்கு மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புரெவி புயலால், மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதையொட்டி, புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள இறால் குஞ்சு வளர்ப்பு பண்ணைக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்தவேளையில், நேற்று மாலை சுமார் 3 மணியளவில், இறால் குஞ்சு வளர்ப்பு பண்ணை கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்கள், வேலைக்கு வராததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories:

>