செய்யூரில் பெய்த கனமழையால் 12 குடிசைகள் இடிந்து விழுந்தன

செய்யூர்: செய்யூர் வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால், 12 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், கொட்டகை சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாடு பலியானது. புரெவி புயலின் காரணமாக நேற்று முன்தினம் முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, இரவு முதல் அதிகாலை வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாரத்தில் உள்ள செய்யூர், சூனாம்பேடு, பவுஞ்சூர், சித்தாமூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையினால், செய்யூர் அருகே ஆற்காடு, போரூர்,  சின்ன கயப்பாக்கம், வன்னியநல்லூர், கடுக்கலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 12 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அங்கு வசித்த மக்கள் உயிர் தப்பினர். இதேபோல், மேற்கு செய்யூரில் லோகபெருமாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, கொட்டகை சுவர் இடிந்து விழுந்து பலியானது.

தகவலறிந்து, செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரன், சம்பவ இடங்களுக்கு சென்று சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்து, பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர், சித்தாமூர் ஒன்றியத்தில் முழு கொள்ளளவை எட்டிய நீர்பிடிப்பு பகுதிகளில் பார்வையிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி, அங்குள்ள கரைகளை ஆய்வு செய்து, பலம் குறைவாக உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டார்.

Related Stories: