மூதாட்டியிடம் 3.75 லட்சம் அபேஸ்

கூடுவாஞ்சேரி: விழுப்புரத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி கலாதேவி (65). விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் 11 சவரன் நகைகளை அடகு வைத்துள்ளார். சமீபத்தில் சங்கர நாராயணன் இறந்தார். இந்நிலையில், கணவர் இறந்ததற்காக கிடைத்த பணத்தை, வங்கியில் செலுத்தி அடகு வைத்த நகைகளை மீட்க கலாதேவி முடிவு செய்தார். இதையடுத்து, ஊரப்பாக்கத்தில் வசிக்கும் தனது மகள் கவிதா வீட்டுக்கு நேற்று காலை புறப்பட்டார். அப்போது, 3.75 லட்சத்தை எடுத்து கொண்டு வந்தார். ஊரப்பாக்கத்தில் கலாதேவி, பஸ்சில் இருந்து இறங்கும்போது கூட்ட நெரிசலில் 2 பெண்கள் இடித்ததாக கூறப்படுகிறது.

அங்கிருந்து பஸ் புறப்பட்டதும், கலாதேவி தனது கைப்பையில்  இருந்த பணத்தை காணாமல் அலறி கூச்சலிட்டார். அதற்குள் பஸ் வேகமாக சென்றுவிட்டது. இதுகுறித்து கலாதேவி, கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதில், கூடுவாஞ்சேரியில், பஸ் நின்றபோது, 2 பெண்கள் பஸ்சில் ஏறியதாக குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பெண்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: