காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை: வீடுகளை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடையில் நிவர் புயல் காரணமாக, சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து 2 நாட்கள் ஓய்ந்திருந்த மழை, நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் தொடங்கியது.இரவு சுமார் 7 மணியளவில் தொடங்கிய கனமழை, விடிய விடிய பெய்தது. இதனால், திருக்காலிமேடு பகுதியில் தாழ்வான இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் உடமைகள் சேதமடைந்தன.

மேலும் முறையான வடிகால் வசதி இல்லாமல் செவிலிமேடு, ஓரிக்கை, ஜெம் நகர் உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், ஜெசிகே நகர், தூக்குமரகுட்டை ஆகிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம், மேலமய்யூர், திம்மாவரம், வல்லம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். சிங்கபெருமாள் கோயில், பாரேரி, விஞ்சியம்பாக்கம்,பொத்தேரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையளவு (மி.மீட்டரில்) விவரம்:

காஞ்சிபுரம்        17.40

ஸ்ரீபெரும்புதூர்    14.20

உத்திரமேரூர்    30.00

வாலாஜாபாத்    11.00

செம்பரம்பாக்கம்    26.00

குன்றத்தூர்        20.20

Related Stories: