×

வால்டாக்ஸ் சாலையில் நெரிசலை தவிர்க்க யானைகவுனி பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை

சென்னை: வால்டாக்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க யானைகவுனி பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:வட சென்னையையும், மத்திய சென்னையையும் இணைக்கும் பழமைவாய்ந்த யானைகவுனி ரயில்வே மேம்பாலம் மிகவும் பழுதடைந்ததால் அதை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலம் மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தினசரி 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாகனங்கள் வரை பயன்படுத்தி வந்த இந்த பாலம் மூடப்பட்டதால், மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

ஆனால், 4 ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருகிறது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என கடந்த ஜூலை 15ம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தேன். பிறகு, பலமுறை தங்களை நேரில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்தியோடு, கடந்த அக்டோபர் 3ம் தேதி கடிதம் ஒன்றையும் வழங்கினேன். கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு காலத்தில் ரயில்வே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நானும், துறைமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபுவும் அந்த பாலப் பணிகளை பார்வையிட்ட போது, பழைய பாலத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. அதன் பின்னர் 7 மாதங்களுக்கு மேல் ஆகியும், புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் எதுவும் இதுவரை துவங்கப்படவில்ைல.  இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் இப்பாலப் பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோல், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ‘‘சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ரேடார் கருவி பழுதடைந்துள்ளதால் காரைக்கால் மற்றும் ஹரிகோட்டா ரேடார்களில் இருந்து சென்னைக்கு தேவையான வானிலை தகவல்களை பெற்று பயன்படுத்தி வருகிறோம். நிவர் புயலுக்கு முந்தைய நாட்களில் இருந்தே காரைக்கால் டாப்ளர் ரேடாரில் இருந்து பெறக்கூடிய வானிலை பதிவுகளை வானிலை ஆய்வுத்துறை தன் வலைதளத்தில் பதிவிடாமல் நிறுத்தியிருந்தது.
இதனால் புயலை துல்லியமாக கணிக்கும் பணியில் பின்னடைவு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது.சென்னை துறைமுக நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார் 500 கிலோமீட்டர் சுற்றளவில் வானிலை நிலவரத்தை கண்காணித்து வழங்கும் திறன் பெற்றது. இந்த ரேடாரில் இருந்து வரும் தரவுகள் தான் வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி புயல்களை பற்றி எச்சரிக்கிறது.

மேலும் காற்றின் வேகம் மற்றும் திசை பற்றிய முக்கிய தரவுகளை வழங்குகிறது. இது கொரோனா காலம் என்பதால் மழைக்கால நோய்கள் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. இது மாநகரின் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் பலவீனபடுத்தும். இத்தகைய சூழ்நிலையை தவிர்ப்பதற்கும், அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படுவதற்கும் உதவும் வகையில் சென்னை துறைமுகத்தில் பழுதடைந்துள்ள ரேடாரை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Dayanidhi Maran ,completion ,General Manager ,Southern Railway ,Valdox Road ,Elephant Pass , Dayanithi Maran MP urges Southern Railway General Manager to expedite construction of Yanagwani bridge to avoid congestion on Valdox road
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...