டெல்லி போராட்டத்தில் பங்கேற்க திருச்சியிலிருந்து புறப்பட்ட விவசாயிகள் கைது

திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 8ம் நாளாக நேற்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட நேற்று காலை திருச்சியிலிருந்து ரயிலில் புறப்பட்டு செல்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 49 விவசாயிகள் திருச்சி ஜங்சனுக்கு வந்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை தடுத்து கைது செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘‘ வேளாண் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் இணையாமல் விவசாய சங்கங்கள் தனித்து போட்டியிடுவோம். வேளாண் சட்டங்களால் பொதுமக்கள், விவசாயிகளுக்கு பாதகங்களை எடுத்து கூறி 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.’’ இவ்வாறு  அவர் கூறினார்.

Related Stories: