நிலத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டல் அதிமுக முன்னாள் எம்பியால் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு எஸ்பி ஆபீசில் தம்பதி மனு

விழுப்புரம்: வேலூர், ரத்தினசிங்குலமேலாண்ட தெருவை சேர்ந்த சுப்ரமணி. இவர் மனைவியுடன் வந்து நேற்று விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: செஞ்சி அருகே அண்ணமங்கலத்தில் எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதனருகே 30 சென்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த நிலத்தின் வழியாக மட்டுமே என் நிலத்துக்கு செல்ல முடியும். வேறு வழி கிடையாது. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. செஞ்சி ஏழுமலை, என்னுடைய நிலத்தை தனக்கு தருமாறு பலமுறை வற்புறுத்தினார். தொடர்ந்து இடையூறு கொடுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த அவர், ஆதிதிராவிடர்களுக்கு சுடுகாடு இடம் தனியாக இருந்தும், நான் பயன்படுத்தும் பொது வழியில் பிணத்தை புதைக்க வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்நிலையில், அடியாட்களை அனுப்பி நிலத்தை கொடுத்துவிடு என்று மிரட்டி வருகின்றனர். என்னுடைய உழைப்பால் நிலத்தை வாங்கி பயிரிட்டு வருகின்றேன். எங்கள் உடைமைகளுக்கு பாதிப்போ அல்லது எங்களின் உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பும், ஏழுமலையே காரணம். எனவே, எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: