தமிழகத்தில் அவசரகதியில் மாவட்டங்கள் பிரிப்பு: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மிகவும் குறுகலான, நெரிசல் மிகுந்த பகுதியாகும். ஆம்புலன்ஸ் வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படும். எனவே, தென்காசி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை வேறு பகுதியில் அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தமிழகத்தில் அவசரகதியில் மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. சம விகிதத்தில் பிரிப்பதில்லை. உள்கட்டமைப்பு வசதிகளை பார்ப்பதில்லை. 2 அல்லது 3 தாலுகாக்களைக் கொண்டு அரியலூர் மற்றும் பெரம்பலூரை தனி மாவட்டமாக பிரித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. ஒரு மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகளும், மற்றொரு மாவட்டத்தில் குறைந்த அளவிலான தொகுதிகளும் உள்ளன. இதனால், சமமான வளர்ச்சி ஏற்படுவதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சமமான சட்டமன்ற தொகுதிகளும், நாடாளுமன்ற தொகுதிகளும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு எம்பி தொகுதி, 5 எம்எல்ஏ, கலெக்டர், எஸ்பி மற்றும் மாவட்ட நீதிபதி இருக்கும் வகையில் பிரிக்க வேண்டும். தங்களின் தேவைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்கக்கூடாது. அப்போது தான் சீரான வளர்ச்சி இருக்கும். இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: