ஏஜென்டுகள் தான் போராட்டத்தை தூண்டுகிறார்கள் வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏஜென்டுகள்தான், போராட்டத்தை தூண்டுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று சேலம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை. அசாம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஏஜென்டுகள் மூலம் விளைபொருட்களை விற்பார்கள். அங்கு 8 சதவீத கமிஷனை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ ஒரு சதவீதம் மட்டும் விளை பொருள் விற்பனைக்கு வரியை அரசு பெறுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை போராட ஏஜென்டுகள் தூண்டுகிறார்கள்.

அதனால், போராட்டங்கள் நடக்கிறது. விளை பொருட்களை விற்க விவசாயிகள் ஒப்பந்தம் செய்வதால், லாபம் தான் கிடைக்கும்.  விவசாயிகளை காப்பாற்ற இந்த சட்டங்கள் உதவுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இச்சட்டங்களை பற்றி, பாஜ சகோதரர்களுக்கு பதிலாக நான் விளக்கம் அளித்து வருகிறேன்.  அவர்கள் தான் இதனை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இடஒதுக்கீடு வழங்கப்படும். அதிமுக அரசில் எந்த ஊழலும் இல்லை. எனது உறவினருக்கு டெண்டர் கொடுத்ததில் முறைகேடு எதுவும் இல்லை. அந்த டெண்டரை உலக வங்கி வழங்கியது. அதுவும் ஆன்லைனில் விண்ணப்பித்து, ஆன்லைனில் பணம் செலுத்தி, அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் எங்கிருந்து ஊழல் செய்ய முடியும்?. ஆன்லைன் டெண்டர் என்றால், அமெரிக்கா, சீனா, ஜப்பானில் இருந்து கூட டெண்டர் கோருவார்கள். அப்படி இருக்கையில் எப்படி ஊழல் நடக்கும்?. அந்த ஒரு டெண்டர்  தான், முழுமையாக ஆன்லைனில் பணம் செலுத்தி பெறப்பட்டிருக்கிறது. நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் பழி சுமத்துகின்றனர்.  இவ்வாறு முதல்வர் கூறினார்.

ரஜினி கட்சி தொடங்குவது பற்றி முழுமையாக தெரியாது

ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை பற்றி முதல்வரிடம்  கேட்ட போது, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பது பற்றி, முழுமையாக எனக்கு தெரியாது. நான் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் இருந்தேன். அதனால், அவரது பேட்டியை, அறிக்கையை முழுமையாக பார்த்து விட்டு பதில் கூறுகிறேன். எப்படியும் என்னை நீங்கள் விடப்போவதில்லை. மீண்டும் கேட்க போகிறீர்கள். அப்போது பதிலளிக்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories: