அறநிலையத்துறை கோயில்களில் இனிமேல் தமிழிலும் குடமுழுக்கு கட்டாயம்: தவறினால் 10 லட்சம் அபராதம் : ஐகோர்ட் கிளை கடும் எச்சரிக்கை

மதுரை: கரூரைச் சேர்ந்த இளஞ்செழியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 900 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் குடமுழுக்கு விழா டிச. 4ல் (இன்று) நடக்கிறது. சைவ ஆகம விதிப்படி, தேவாரம் மற்றும் திருவாசகம் வாசித்து தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அறநிலையத்துறை வக்கீல் நாராயணகுமார் ஆஜராகி, ‘‘குடமுழுக்கு விழாவில் 25 ஓதுவார்கள் பங்கேற்று தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுகின்றனர். 6 கால பூஜையும் தமிழில் நடக்கும். கும்பத்திற்கு புனித நீர் கொண்டு செல்லும்போதும், தீபாராதனை காட்டும் போதும்  தமிழில் பாடப்படும்’’ என்றார்.

நீதிபதிகள், ‘‘தமிழிலும் குடமுழுக்கு நடக்கும் என்றால், ஓதுவார்கள் பெயரை ஏன் அழைப்பிதழில் அச்சிடவில்லை’’ என்றனர். இதற்கு, ‘இனி பெயர்கள் அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘இனிவரும் காலங்களில் அறநிலையத்துறை கோயில்களில் தமிழிலும் கண்டிப்பாக குடமுழுக்கு நடத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கையுடன் இனிமேல் மனுக்கள் தாக்கலானால் கோயில் நிர்வாகங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அறநிலையத்துறை தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை அபிடவிட்டாக தாக்கல் செய்ய வேண்டும்’’ எனக் கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.

Related Stories: