லாரி மோதி நொறுங்கியதால் காரில் சிக்கி உயிருக்கு போராடிய தாய், மகன் மீட்பு: டிரைவர் கைது

சென்னை: மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி தாய், மகன் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிக்கராயபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வாசுதேவன் (59), தொழிலதிபர். இவரது தாயார் கோமளவல்லி (85). இவர்கள் சென்னை பழவந்தாங்கலில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை காரில் சென்றனர். தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை அருகே, ஜிஎஸ்டி சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, பின்னால் மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரியின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய தாயும், மகனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் காரில் சிக்கி இருந்த அவர்களை பத்திரமாக மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, சானடோரியம் முதல் தாம்பரம் பேருந்து நிலையம் வரை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Related Stories:

>