ராகுல்காந்தி பிரசார சுற்றுப்பயணம் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை: சத்தியமூர்த்தி பவனில் நடந்தது

சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரத்துக்கு வருகை தர உள்ள நிலையில், அவரது சுற்றுப்பயணம் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கூட்டம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் முன்னிலை வகித்தார். ராகுல் காந்தியின் தனி செயலாளர் பைஜூ மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ். இளங்கோவன், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வரும் ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத்தை இறுதி செய்வது குறித்தும் விவாதித்தனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அடுத்த மாதமும் நீட்டிக்கப்பட்டால் ராகுல் சுற்றுப்பயணத்தை எப்படி மாற்றி அமைப்பது என்றும், தமிழகத்தில் பிரசாரம் தொடங்கும் பட்சத்தில், 10 இடங்களில் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியை பங்கேற்கே செய்வது என்றும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஏர் கலப்பை பேரணியை வெற்றி பெறச் செய்வது குறித்தும் விவாதித்தனர். மேலும், தேர்தல் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: