ரஜினி அழைப்பு விடுத்தாலும் திமுக கூட்டணியில்தான் தொடர்ந்து இருப்போம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ரஜினி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தாலும் திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி தமிழகத்துக்கு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வர இருக்கிறார். நாங்கள் வகுத்துள்ள இந்த செயல் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். புதிய ஆட்சி மாற்றம் உண்டாகும். அதற்கான ஏற்பாடுகளை இன்றைக்கு தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

ராகுல் காந்தியின் வருகை தமிழகத்தில்  மாற்றத்தை ஏற்படுத்தும். மத்திய, மாநில அரசுகளால் வஞ்சிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்து அவர்களது குறைகளை கேட்பார். ஏற்கனவே நாங்கள் தேர்தலை சந்திப்பதற்கான குழுவை அமைத்துள்ளோம். அதன் அடிப்படையில் தான் நாங்கள் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுகிறோம். இன்றைக்கு கூடி இருக்கும் இந்த குழு தான் சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு குழு. 234 தொகுதிகளிலும் சர்வே நடந்து கொண்டிருக்கிறது.

நடிகர் ரஜினி 30 ஆண்டுகளாக பேசிக் கொண்டு தான் இருக்கிறார். எனவே, அவரது தொண்டர்களும் இளமையானவர்களாக இல்லை. அவரும் இளமையானவராக இல்லை. என்றார்.

இப்போது அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். நாளை என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்து அதுபற்றி கூறலாம். ரஜினி கூட்டணியில் எங்களுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் இருக்கும் கூட்டணியை விட்டு பின்வாசல் வழியாக நுழைவதற்கு எங்களால் முடியாது. திமுகவில் கூட்டணி என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும். ஆனால் ஆன்மிக அரசியல் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: