×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக நாளை கருப்புக்கொடி போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை: வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று காலை காணொலிக் காட்சி வழியாக நடந்தது. இதையடுத்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பாஜ அரசும், மாநில அதிமுக அரசும் நாட்டின் விவசாயப் பெருமக்கள் முன்வைத்த, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட, எந்த கோரிக்கையையும் ஏற்காமல், எல்லா வகையிலும் அவர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

இப்போது, ‘டெல்லி சலோ’ என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களிலிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, இந்திய நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு; பசியும், பட்டினியுமாகக் காத்துக் கிடந்து தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்கள், எஞ்சியிருக்கும் தங்கள் வாழ்வாதாரத்தையும், நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, தீரத்துடன் போராடி வருவது கண்டு பெரிதும் வியந்து திமுக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம், மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாபெரும் இந்தப் போராட்டம் தான் ஆணவம் கொண்ட மத்திய பாஜ அரசை அசைத்து அதிர்வடையச் செய்து கொண்டிருக்கிறது. இப்போது விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது, ஜனநாயகத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் கட்ட வெற்றி. விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அவர்தம் வேதனைகளைப் பன்மடங்கு பெருக்கி, காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் இந்த வேளாண் சட்டங்களுக்கு
வெட்கமில்லாமல் ஆதரவளித்து, தனது விவசாயிகள் விரோதப் போக்கையும் - மத்திய பா.ஜ அரசுக்கான காரியக் கூத்தாடும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தி அரசியல் கூட்டணிக்காக இங்குள்ள அ.தி.மு.க அரசு பெருமைப்பட்டுக் கொண்டதை, இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. பாஜவிற்கு எதிலும் எப்போதும் பல்லக்குத் தூக்கி; தமிழக விவசாயிகளுக்கும், தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமிக்கும், அதிமுக ஆட்சிக்கும் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயிகளின் உணர்வுக் கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்; விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகராம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும் வருகின்ற டிசம்பர் 5 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், திமுக சார்பில், கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அற வழியில், ஜனநாயக முறையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாய அமைப்புகளும் - விவசாயிகளும் - பொதுமக்களும் பெருமளவில் ஆதரவு தெரிவித்து, பங்கேற்றிட வேண்டுமென இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : DMK ,black flag protest ,Delhi , DMK black flag protest tomorrow in support of struggling farmers in Delhi: District secretaries meeting results
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு