புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கும்...சென்னை வானிலை மைய இயக்குநர் பேட்டி.!!!

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக உருவானது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த நவம்பர் 30-ம் தேதி உருவானது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று (3.12.2020) மன்னார் வளைகுடா பகுதியில்,  பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், (04-12-2020) நாளை அதிகாலையில் பாம்பன்- கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக தெரிவித்தார். தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பாம்பனுக்கு மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில்  நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து, மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையேயான கடல்பகுதியில் கடந்து செல்லக்கூடும். தொடர்ந்து வருகிற 12  மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். புயல் வலுவிழந்ததால் காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தொடர்ந்து, காற்றின் வேகம் குறையும் என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழைப்பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பலத்த காற்றை பொருத்தவரை தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி:

தென்காசி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  புரெவி புயல் வலுவிழந்ததாக தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி புரெவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.  

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழந்ததால் காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றால அருவியில் குளிக்க தடைநீக்கம் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்றார்.

Related Stories: