×

அதிக பாதிப்புள்ளவருக்கு முதலில் தடுப்பூசி: இம்மாத இறுதியில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசி: டெல்லி AIIMS இயக்குநர் ரன்தீப் நம்பிக்கை.!!!

புதுடெல்லி: இம்மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கும் என இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் கடந்த 8  மாதத்துக்கும் மேலாக பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. உலகளவில் இதுவரை 15 லட்சத்து 02 ஆயிரத்து 255 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 6 கோடியை 49  லட்சத்து 85 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்க்கு எதிராக சரியான தடுப்பு மருந்து இல்லாததால் நோய் தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் அவதிக்குள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு  நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பணிகளின் முன்னேற்றம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்த  மாதத்தின் இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் அவசர பயன்பாட்டிற்கு தடுப்பூசி வழங்குவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

மருந்தை குளிர்நிலையில் பராமரித்தல், மருந்துகளை இருப்பு வைக்கும் பொருத்தமான இடங்கள், யுக்திகளை உருவாக்குதல், தடுப்பூசிகளைப் போடுவதற்கு பயிற்றுவித்தல் மற்றும் சிரிஞ்ச்கள் கிடைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பூசி  விநியோகத் திட்டத்திற்கான பணிகள், மத்திய மற்றும் மாநில அளவில் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன.

ஆரம்பத்தில், அனைவருக்கும் கொடுக்க போதுமான அளவுகளில் தடுப்பூசி கிடைக்காது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடும் வகையில் முன்னுரிமை பட்டியல் தேவை.  முதியவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடவேண்டும்.

இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று தரவுகள் காட்டுகின்றன. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் சமரசம் செய்யப்படவில்லை. சுமார் 80,000 தன்னார்வலர்களுக்கு  தடுப்பூசி வழங்கப்பட்டதில், குறிப்பிடத்தக்க கடுமையான பாதகமான பக்கவிளைவுகள் எதுவும் காணப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த 3  மாதங்களுக்குள், பெரிய மாற்றத்தை நெருங்க முடியும் என்றும் தெரிவித்தார்.


Tags : Randeep Nambikai. ,Delhi AIIMS , The first vaccine for the most vulnerable: the corona vaccine in use at the end of this month: Delhi AIIMS Director Randeep hopes !!!
× RELATED அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை...