×

மக்களால் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளும், தேவைகளும் நிச்சயம் நிறைவேறும்..!! மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: திமுக ஆட்சி அமையும் போது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் நிச்சயம் நிறைவேறும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழ் மக்களின் பேராதரவுடன் மாற்றம் காண இருக்கும் ஆட்சியில் தடையின்றி நிறைவேற்றபடும் என தெரிவித்துள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை; அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டுவதையே, அல்லல் நிறைந்த பெரும்  சவாலாக எதிர்கொள்ளும் உடன்பிறப்புகளை, ‘மாற்றுத் திறனாளிகள்’ என அழைக்கச் செய்து, அவர்களின் நலனுக்கென தனித்துறையை உருவாக்கி, தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து அக்கறையுடன் கவனித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட கண்ணொளித் திட்டம் முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம் வரை, ஒவ்வொன்றையும் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்படுத்தி இதய நிறைவு கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு, அவர்களுக்குத் துணையாகப் பேருந்தில் பயணிப்போருக்கும் கட்டணச் சலுகை, மேற்படிப்பு பயில்வோருக்கு முழுக் கட்டணச் சலுகை எனக் கலைஞர்  ஆட்சிக்காலத்தில் உரிமைகள் - சலுகைகள் பலவும் தொடர்ந்து வழங்கப்பட்டன.  டிசம்பர் 3ஆம் நாளினை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐ.நா. அவை அறிவித்துள்ள நிலையில், அந்த நாளில் நடைபெறும் தங்களுக்கான உரிமை  போற்றும் நிகழ்வுகளில், தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விருப்ப விடுப்பு எடுக்கும்  நல்வாய்ப்பையும் வழங்கியது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் இத்தகைய வாய்ப்பை எண்ணிப் பார்க்காத நிலையில், தலைவர் கலைஞர் இதனை வழங்கினார். அடுக்கடுக்கான பல திட்டங்களையும் வகுத்தளித்தார். அந்த நன்றிப் பெருக்குடன், கலைஞரின் ஓய்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வணக்கத்தைச்  செலுத்தும் நெஞ்சம் நெகிழும் நிகழ்வு, ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. திமுக என்றென்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மதித்து, தேவைகளை நிறைவேற்றி,  நலன் பேணும் அற இயக்கம். விரைவில் தமிழ் மக்களின் பேராதரவுடன் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் தடையேதுமின்றி நிறைவேறும் என்ற உறுதியினை இந்த மாற்றுத் திறனாளிகள் நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : MK Stalin , Under the regime that will be changed by the people, the rights and needs of the alternatively abled will surely be fulfilled .. !! MK Stalin's commitment
× RELATED ஒரே நொடியில் அதிமுக ஆட்சியை...