
சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதல்கட்டமாக 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட உள்ளது. 23.5 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது. ஏற்கனவே நிவர் புயலின் போது சில நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் ஏரியில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2-வது முறையாக உயரி நீர் திறக்கப்படுகிறது. காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
திருமுடிவாக்கம், வழிநிலைமேடு நத்தம் பகுதி கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க காஞ்சிபுரம் மாவட்ட சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தல் செய்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். தற்போது 22.15 அடியயை எட்டியுள்ளது. மேலும் நேற்று இரவு முதல் புரெவி புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.