×

பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல்..!! மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகரும் புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்

பாம்பன்: வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறது. வங்க கடலில் கடந்த மாதம் 28-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை இன்று பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 4-ந்தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : storm ,Pamban , Purivi storm 90 km away from Pamban .. !! Storm moving at 12 km / h; Meteorological Center Information
× RELATED அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில்...