×

கடலில் படகு கவிழ்ந்து விபத்து காணாமல் போனவர்களில் மேலும் இருவர் சடலமாக மீட்பு: மற்றவர்களை தேடும் பணி தீவிரம்

மங்களூரு: மங்களூரு அருகேயுள்ள போலார் கிராமத்தை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்யும் ஒருவருக்கு சொந்தமான ஸ்ரீரக்சா என்ற படகில் கடந்த திங்கட்கிழமை காலை மீனவர்கள் குழுவாக அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். கடலில் சுமார் 25 கி.மீட்டர் தூரம் வரை சென்ற அவர்கள் காலை முதல் மாலை வரை மீன் பிடித்துள்ளனர். இதில் அதிகளவு மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மீன்களை படகில் ஏற்றிக் கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தில் சிக்கிய படகு நிலை தடுமாறி தண்ணீரில் கவிழ்ந்தது. படகில் அதிகளவு மீன்கள் இருந்ததால் அதிக பாரத்தால் படகு தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. உடனே மீனவர்கள் மீன்களை கடலுக்குள் கொட்டிவிட்டு படகை மீட்க முயற்சித்தனர். ஆனால் படகு அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இதனால் செய்வதறியாத மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்றனர்.

மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் நீண்டநேரமாகியும் கரைக்கு வராததால் படகின் உரிமையாளர் வயர்லஸ் மூலம் மீனவர்களை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் படகு உரிமையாளர் வேறு ஒரு படகில் சில மீனவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் சென்றபோது மீனவர்களின் படகு விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த படகு விபத்தில் சிக்கி பாண்டுரங்கா சரவணா(58), பிரீதம்(25) ஆகிய மீனவர்கள் உயிரிழந்தனர். இதில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 16 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மேலும் 6 மீனவர்கள் காணாமல் போயினர். இதுகுறித்து தகவலறிந்த கடலோர மீட்பு படையினர் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சந்தன்(21), உசேன்நார்(25) ஆகிய மேலும் இரண்டு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags : sea , Two more bodies found after boat capsize at sea: Search for others intensifies
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான...