×

வர்த்தூர் பிரகாஷை கடத்தியது யார்? தனிப்படை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பெங்களூரு: முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் கடத்தலுக்கு 3 விதமான காரணங்கள் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கப்படும் நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் மற்றும் நகர போலீஸ் கமிஷனரை சந்தித்த அவர், தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ், கடந்த 26ம் தேதி இரவு கே.ஆர்புரம் அருகே 8 பேர் கும்பலால் கடத்தப்பட்டார். கோலார் மாவட்டம் சிந்தாமணிக்கு கடத்தி சென்ற கும்பல் இரும்பு கம்பி கொண்டு தாக்கி ரூ.30 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உயிருக்கு பயந்த அவர் ரூ.48 லட்சம் மட்டுமே வழங்கினார். இதையடுத்து கும்பல் அவரை ஒசகோட்டை சிவனபுரா அருகே விட்டு சென்றனர். 5 நாட்களாக இந்த கடத்தல் விவகாரம் யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் வர்த்தூர் சரகத்திற்குட்பட்ட பகுதியில் பிரகாஷின் காரை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திய பின்னர் இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து அவர் வர்த்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. பணத்திற்காக கடத்தியிருப்பது மட்டும் தெரியவந்துள்ளதாக கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்த போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக வர்த்தூர் பிரகாஷின் கார் டிரைவர் சுனில், கோலார் தனியார் மருத்துவமனையில் முன்கூட்டியே சென்று சிகிச்சை பெற்றிருப்பதால் அவரிடமும் இது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, ஒயிட்பீல்டு டி.சி.பி தேவராஜ் தலைமையில் சிறப்பு தனிப்படை ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 3 காரணத்திற்காக வர்த்தூர் பிரகாஷ் கடத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது முன்னாள் அமைச்சரும் தொழிலதிபருமான வர்த்தூர் பிரகாஷிற்கு இரண்டு, மூன்று இடங்களில் பண்ணை வீடுகள் உள்ளது. மேலும் வர்த்தூர் பகுதியில் சொந்தமாக பால் பண்ணை தொடங்க திட்டமிட்டார். இதற்காக  மகாராஷ்ட்டிராவில் இருந்து 1600 பசுமாடுகளை வாங்கி வந்துள்ளார். இதில் 1000 மாடுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இறந்துவிட்டது. 600 மாடுகள் கவனிக்க முடியாமல் விற்பனை செய்துவிட்டார். இதை அறிந்து மகாராஷ்ட்டிராவை சேர்ந்த கூலிப்படையினர் அவரை கடத்த முயற்சித்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோன்று வர்த்தூர் பிரகாஷின் மனைவி இறந்த பின்னர், டீச்சர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் மனமுறிவு ஏற்பட்டது. இதனால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் வர்த்தூர் பிரகாஷின் மீது குற்றம் சுமத்தி வரும் டீச்சரின் மகன்கள், முன்விரோதத்தில் கூலிப்படையை வைத்து, அவரை கடத்தியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. மூன்றாவதாக கோலார் பகுதியில் வர்த்தூர் பிரகாஷிற்கு ஏராளமான சொத்துகள் இருப்பதால், அந்த சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் செயல்படும், எதிராளி கும்பலை சேர்ந்தவர்கள், அவரை கடத்தி சென்று பணம் பறிக்க முயற்சித்திருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த 3ல் ஒரு காரணங்கள் உறுதியானால், அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு  வருகின்றனர். வர்த்தூர் பிரகாஷின் மீது குற்றம் சுமத்தி வரும் டீச்சரின் மகன்கள், முன்விரோதத்தில் கூலிப்படையை வைத்து, அவரை கடத்தியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

*  பாதுகாப்பு அளிக்க கோரிக்கை
கடத்தப்படுவதற்கு முன்னதாக பல முறை கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. முதலில் இதை அலட்சியமாக எடுத்து கொண்ட அவர், கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான பின்னர் தான், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிந்து கொண்டார். இது தொடர்பாக நேற்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்தை சந்தித்த அவர், கடத்தல் சம்பவம் குறித்து, அதற்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து எடுத்து கூறியுள்ளார்.  மேலும் அதே கும்பலால் தனக்கும், தனது மகன்களின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறிய அவர், தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது தரப்பில் இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியிருந்தார். இதை ஏற்ற உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்திடம், உரிய பாதுகாப்பு அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். இதை ஏற்ற நகர போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

Tags : Varthur Prakash ,police investigation , Who abducted Varthur Prakash? Startling information in the personal police investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை