×

ஹர்திக், ஜடேஜா அதிரடியால் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி: அறிமுக போட்டியில் நடராஜன் அசத்தல்

கான்பெரா: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட  ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. முதல் ஆட்டத்தில் 66 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 51ர ன் வித்தியாசத்திலும் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி கான்பெராவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஷமி, சாஹல், அகர்வால் ஆகியோருக்கு பதிலாக ஷர்துல் தாகூர், குல்தீப் ஆகியோருடன் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன்  அறிமுகமானார். ஆஸி. அணியில் வார்னர், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோருக்கு பதிலாக ஏகார், அபாட், அறிமுக வீரர் கேமரான் கிரீன் இடம் பெற்றனர். இந்த தொடரில் முதல்முறையாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.  தவான், கில் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். தவான் 16 ரன்னில் அபாட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் கேப்டன் கோஹ்லி உறுதியுடன் விளையாட கில் 33, ஷ்ரேயாஸ் 19, ராகுல் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 25.3 ஓவரில்  4விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து திணறியது. கோஹ்லி 63 ரன் (78 பந்து, 5 பவுண்டரி)  எடுத்து வெளியேற, இந்தியா 250 ரன்னாவது எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், ஹர்திக் - ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இந்தியா 50 ஓவரில் 5  விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்தது.  ஹர்திக் 92* ரன் (76 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடஜா 66* ரன்னுடன் (50 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  ஆஸி. தரப்பில் ஏகார் 2, ஹேசல்வுட், அபாட், ஸம்பா  தலா ஒரு  விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 303 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் பிஞ்ச், லாபுஷேன் துரத்தலை தொடங்கினர். லாபுஷேன் 7 ரன் எடுத்து அறிமுக வேகம் நடராஜன் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.  முதல் போட்டியிலேயெ விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்த நடராஜனுக்கு சக வீரர்கள் வாழ்த்து கூறினர். அந்த ஓவரில் அவர் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டனாகவும் வீசி அசத்தினார். இத்தொடரில் பவர் பிளேயில் இந்தியாவுக்கு கிடைத்த  முதல் விக்கெட்டும் அதுதான். ஸ்மித் 7, ஹென்ரிக்ஸ் 22 ரன் எடுத்து ஷர்துல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் பிஞ்ச் 75 ரன் விளாசி (82 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஜடேஜா சுழலில் தவான் வசம்  பிடிபட்டார். அறிமுக வீரர் கிரீன் 21 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன்னில் வெளியேறினர். ஆஸ்திரேலியா 37.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்த நிலையில், இந்தியாவின் கை ஓங்கியது.  

ஆனால், மேக்ஸ்வெல் வழக்கம் போல் இந்திய பந்துவீச்சை சிதறடித்து பீதி ஏற்படுத்தினார். அதிலும் நடராஜன் வீசிய 44வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை விரட்டினார். அதனால் பதட்டத்துடன் பந்து வீசிய நடராஜனை ‘ரிலாக்ஸ்’ என்று  அமைதிப்படுத்தினார் கோஹ்லி. அந்த ஓவரில் மட்டும் மேக்ஸ்வெல்-ஆஷ்டன் இணை 18 ரன் குவித்தது.  பரபரப்பான கட்டத்தில் மேக்ஸ்வெல் 59 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பூம்ரா வேகத்தில் கிளீன் போல்டானார்.  அபாட் 4  ரன்னில் வெளியேற, ஏகார் 28 ரன் எடுத்து நடராஜன் வேகத்தில் குல்தீப் வசம் பிடிபட்டார். ஸம்பா 4 ரன் எடுத்து பூம்ரா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆக, ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 289 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹேசல்வுட் 7 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை சுவைத்தது. ஷர்துல் 3, பூம்ரா, நடராஜன் தலா 2, குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழத்தினர். தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில்  கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஹர்திக், தொடர் நாயகனாக ஸ்மித் தேர்வாகினர். முதல் டி20 போட்டி நாளை கான்பெராவில் நடக்கிறது.

வாழ்த்து மழையில்...
அறிமுகமான முதல் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். ‘வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்’ என்று  திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோரும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹர்திக் கூறுகையில், ‘நடராஜனுடைய கதை மிகவும் தனித்துவமானது. மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்து சாதித்துக் காட்டியுள்ள அவரது பயணம் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஊக்கம்  மற்றும் உத்வேகமளிக்கும்’ என்றார்.

தாய் ஆனந்த கண்ணீர்!
தனது மகன் நடராஜன் முதல் முறையாக தாய்நாட்டுக்காக விளையாடுவதை பார்ப்பதற்காக, சின்னப்பம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் (சேலம் மாவட்டம்) தாய் சாந்தா, சகோதரி தமிழரசி மற்றும் குடும்பத்தினர் காலையில் இருந்தே டிவி  முன்பு அமர்ந்திருந்தனர். நடராஜன் பந்துவீசும் காட்சியை அவர்கள் ரசித்து பார்த்தனர். லாபுஷேன் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தியபோது, அவரது குடும்பத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது நடராஜனின் தாய் சாந்தா, திருஷ்டி  சுற்றி நெட்டி எடுத்தார். இறுதிக் கட்டத்திலும் நடராஜன் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார். டிவியில் மகன் வரும்போது, அவருக்கு தாய் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தார். மேலும் தேங்காய் சுற்றி உடைத்தார். ‘சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்  மீது நடராஜனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. நாங்கள் வறுமையில் இருந்தாலும் அவனது விளையாட்டு ஆர்வத்திற்கு தடை போடவில்லை. கடுமையான முயற்சியால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். சின்னப்பம்பட்டிக்கு

Tags : Consolation win ,India ,debut match ,Jadeja ,Hardik ,Natarajan , Consolation win for India with Hardik, Jadeja action: Natarajan stunned in debut match
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...