×

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு: அதிமுக அரசு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

ஈரோடு:  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்து விவசாயிகளுக்கு அ.தி.மு.க. அரசு பச்சை துரோகம் செய்துள்ளது என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.   ஈரோடு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’  என்ற தலைப்பில் 3வது நாளாக நேற்று தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டார். மொடக்குறிச்சியில் ஐடிபிஎல். எரிவாயு குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை  கேட்டறிந்தார். அங்கு நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  ஆனால் அந்த சட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். தன்னை விவசாயி எனக் கூறிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் விவசாயிகளுக்கு அதிமுக அரசு பச்சை துரோகத்தை செய்துள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் தெரிவித்துள்ள கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேற்றப்படும்.  அதிமுக., ஆட்சி எப்போது முடிவுக்கு வரும், திமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : government ,AIADMK ,Kanimozhi MP , Support for new agricultural laws: AIADMK government has betrayed farmers: Kanimozhi MP Indictment
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...