15 கோடி செல்போன் கொள்ளை வழக்கு ம.பியில் மேலும் 7 பேர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

ஓசூர்: காஞ்சி புரத்தில் இருந்து 15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு மும்பை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று, கடந்த அக்டோபர் 20ம் தேதி புறப்பட்டு சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 21ம் தேதி காலை  மற்றொரு லாரியில் வந்த 20க்கும் மேற்பட்ட மர்ம கும்பல், டிவைர்களை தாக்கி விட்டு செல்போனுடன் லாரியை கடத்திச் சென்றது. விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான  கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்று, ஒரு மாதமாக கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பரத்தேவாணி (37) என்பவரை  டெல்லியில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்தனர். கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அமீதாபா தத்தா என்பவரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் ம.பி.யில் கைது செய்துள்ளனர். அவர்களை நேற்று மாலை சூளகிரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இது தொடர்பாக, தனிப்படை  போலீசார் கூறுகையில், ‘ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும், செல்போன்களை வங்கதேசத்திற்கு விற்பனை செய்யும் முகவர்கள்.  தற்போது இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 4  லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் பற்றியும் அவைகளை எங்கெங்கு விற்றுள்ளனர் என்பது பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories: