
சென்னை.3: 800 கோடி விவகாரத்தில் அமைச்சர் துரைக்கண்ணுவின் பினாமிகள் சொத்து வாங்கி பதிவு செய்த பத்திரபதிவு அலுவலகங்களின் சார் பதிவாளர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். போலீசாரிடம் கோடிகள் சிக்காமல் இருக்க ஒன்றிய செயலாளரான பினாமி ஒருவர் தனது மகன் மூலம் திருப்பூர், ஈரோட்டில் இடங்களை வாங்கி குவித்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கட்சியை பலப்படுத்த, கட்சி தலைமை கொடுத்த 800 கோடி விவகாரம் பூதாகரமாகி வருகிறது. 800 கோடியில் பாதி பணம் மீட்கப்பட்ட நிலையில் மீதியை மீட்க கட்சி தலைமை அனைத்து வழிகளிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
அமைச்சரின் உறவினர்கள், பினாமிகள், உதவியாளர்கள், நெருக்கமானவர்கள் என அனைவரும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். இதில் தற்போது பத்திரவு பதிவு அதிகாரிகளும் சிக்கியுள்ளனர்.
அமைச்சர் துரைக்கண்ணு, அவரது பினாமிகள் ஆளுங்கட்சி கொடுத்த பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். அப்படி வாங்கிய சொத்துக்கள் கும்பகோணம், சுவாமிமலை, பாபநாசம், திருவிடைமருதூர், தஞ்சை போன்ற பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பினாமிகளுக்கு பத்திரப்பதிவு செய்த (அப்போது பணியிலிருந்த) சார்-பதிவாளர்கள் பலரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் மேலும் திடுக்கிடும் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.