அதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை : இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி

வாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி  வேலை செய்வதற்காக அமெரிக்க அரசு எச்1 பி விசாக்களை வழங்கி வருகின்றது. கொரோனா நோய் தொற்று பாதிப்பின் விளைவாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உறுதி செய்வதற்காக எச்-1 பி விசாக்களுக்கு கடந்த அக்டோபரில்  அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள அளவீட்டில் மாற்றம்  மற்றும் சிறப்பு வேலை பிரிவில் பல முக்கிய பிரிவுகளை நீக்கவும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து அமெரிக்க வர்த்தக மையம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள்  அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணையின்போது, எச் 1பி விசா தொடர்பான அரசு மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு போதுமான அறிவிப்பு இல்லை என்றும் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும்  அமெரிக்காவுடன் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பு துண்டிக்கபப்டும் அபாயம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்பி வொயிட், ‘‘அரசானது வெளிப்படைத்தன்மை நடைமுறைகளை  பின்பற்றவில்லை. அரசு கொண்டு வந்த இந்த மாற்றங்கள் தொற்று நோய் கால பாதிப்புக்கான அவசரகால நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் டிரம்ப் நிர்வாகம் இதுகுறித்து சில காலமாக கூறிவந்தது. ஆனால்  அக்டோபரில் தான் விதிகளை வெளியிட்டது. எனவே டிரம்ப் அரசு கொண்டு வந்த தொழிலாளர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகளால் கொண்டுவரப்பட்ட எச்1 பி விசா தொடர்பான இரண்டு விதிகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது” என  உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் எச்1பி விசா மூலம் அதிகம் பயனடைந்து வரும் இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories:

>