×

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 8ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக்

*  முதல்கட்டமாக வடமாநிலங்களில் தொடங்குகிறது
*  அத்தியாவசிய பொருள் போக்குவரத்து பாதிக்கும்

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, வரும் 8ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடத்தப்படுவதாக அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக  வடமாநிலங்களில் நடத்தப்பட உள்ள இந்த போராட்டத்தால் நாடுமுழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் பாதிக்கும் நிலை உருவாகும். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடர்ந்தது. மத்திய அரசு அவர்களிடம் நேற்றுமுன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஆனாலும், வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் லாரி ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் தலைவர் குல்தரன் சிங் அத்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வரும் 8ம் தேதி முதல் வடமாநிலங்கள் முழுவதிலும் லாரி ஸ்டிரைக் நடத்தப்படும். டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் இயக்கப்படாது. அதன்பிறகும் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக்கை விரிவுபடுத்துவோம்’’ என எச்சரித்துள்ளார்.அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அமைப்பின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1 கோடி லாரிகள் இயங்குகின்றன. அத்தியாவசிய சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த அமைப்பின் ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தால் டெல்லிக்குள் சரக்கு வாகனங்கள் நுழைய முடியாமல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனால், டெல்லியில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தடை பட்டிருக்கும் நிலையில், லாரி ஸ்டிரைக் அறிவிப்பு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.இதுதவிர, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயரும் அபாயமும் உள்ளது.

˜ வடமாநிலம் முழுவதும் லாரி ஸ்டிரைக் நடத்தப்படுவதால், சரக்கு விநியோகம் தடைபடுவது மட்டுமின்றி, உணவுப் பொருட்கள் தேங்கி வீணாகும் அபாயம் உள்ளது.
˜ விளைபொருட்களை விநியோகத்தில் 65 சதவீத பங்களிப்பை அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் கொண்டுள்ளது.˜ நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடத்தப்பட்டால், காய்கறி, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மருந்து சப்ளையும் தடைபடும்.

Tags : Delhi ,strike , In support of the struggle of Delhi farmers Trucks strike from 8th
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு