குஜராத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ‘ஒற்றுமை சிலை’ வசூலில் ரூ.5.25 கோடி கையாடல்: வங்கி கொடுத்த புகாரில் தனியார் நிறுவனம் மீது வழக்கு

கெவாடியா: குஜராத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ‘ஒற்றுமை சிலையை’ பார்க்க வருவோரிடம் பெறப்படும் தினசரி வசூலில் ரூ.5.25 கோடி கையாடல் நடந்துள்ளது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் தனியார்  நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  குஜராத் மாநிலம், கெவாடியாவில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் படேல் ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல், 2,989 கோடி ரூபாய் மதிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த  சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்பகுதி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக மாறி உள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகள் பார்வையிடுதல், பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவ்வாறு வசூல்  செய்யப்படும் கட்டணங்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

இந்த வசூல் செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட வங்கியின் வதோதரா கிளையின் மேலாளர், தினசரி ரொக்க வசூல் ரூ.5.25 கோடியை ஸ்டாஃபர்ஸ் ஆஃப் ரைட்டர் பிசினஸ் சர்வீசஸ்  பிரைவேட் லிமிடெட் நிறுவன ஊழியர்கள் கையாடல் செய்ததாக, நர்மதா மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், அக்டோபர் 2018 முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்த பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கெவாடியாவின் துணை போலீஸ் சூப்பிரண்டு வாணி தூதாத் கூறுகையில்,  ‘ஸ்டாஃபர்ஸ் ஆஃப் ரைட்டர்ஸ்  பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406, 407,  408, 409, 420, 418, 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேற்கண்ட நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம்.

கொரோனா ஊரடங்குக்கு முன்பு ஆஃப்லைன் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் விநிேயாகம் செய்யப்பட்டது. அப்போது, தினசரி வசூல் வங்கியில் உள்ள இருப்பு கணக்குக்கும், நிறுவன நிர்வாகிகள் சமர்ப்பித்த ரசீதுகள் கணக்குக்கும்  முரண்பாடுகள் உள்ளன. இவை தணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. வங்கி நிர்வாகம் தரப்பில் ரூ.5.25 கோடி கையாடல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது’ என்றார். மேலும், ஒற்றுமை சிலையின் தலைமை நிர்வாக அதிகாரியான மாவட்ட  கலெக்டர் டி.ஏ.ஷா கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், நிறுவனத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் வங்கி நிர்வாகத்திற்கும், வசூலில்  ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கும் இடையிலானது. குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: