டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று வேளாண் சட்டத்தில் உள்ள ஆட்சேபனைகள் குறித்த விபரங்களை மத்திய அரசிடம் விவசாய அமைப்புகள் சமர்ப்பிப்பிக்கின்றன.  நாளை விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்றுடன் 7வது நாளாக அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த  விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகின்றனர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் அசைந்து  கொடுக்கவில்லை.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக டெல்லி விஞ்ஞான பவனில் மாலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங்  தோமர், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தக அமைச்சரும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்பியுமான சோம் பர்காஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், வேளாண் விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்னைகளை ஆராய்வதற்கு 5 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை.  இருப்பினும் 3ம் தேதி (நாளை) அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட  பிரச்னைகளை கண்டறிந்து, அதுகுறித்து அரசின் பரிசீலனைக்கு  இன்று (டிச. 2) தெரிவிக்கும்படி மத்திய அரசு தரப்பில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அதனால், புதிய வேளாண் சட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவசாய அமைப்புகள் ஒன்று கூடி ஆலோசனைகளை நேற்றிரவு முதல் நடத்தி வருகின்றன. அவர்கள் இன்று பிரச்னைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம்  ஒப்படைக்கும்பட்சத்தில், அந்த பிரச்னைகள் தொடர்பாக நாளை (டிச. 3) நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில், டெல்லியின் சிந்து, டிக்காரி, காசிப்பூர்  எல்லையில்  விவசாயிகள் குவிந்துள்ள நிலையில், உத்தரபிரதேச எல்லையில் தடுத்து  நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கு தற்காலிக கொட்டகைகளை அமைத்து  வருகின்றனர். டெல்லியின் பெரும்பாலான எல்லைகள் மூடப்பட்டுள்ளது.  அதனால்,  வரும் நாட்களில் போராட்டம் மேலும் வலுவடையும் என்று கூறப்படுகிறது. அதனால்,  டெல்லி காவல்துறை தனது எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.  விவசாயிகள் எந்த வகையிலும் தலைநகருக்குள் நுழையாதபடி,  எல்லைகளில் பிற  வாகனங்களை தீவிர தணிக்கைக்கு பின்னர் போலீசார் அனுப்பி வைக்கின்றனர்.

இதுகுறித்து, அகில இந்திய கிசான் சமநாயக் சமிதியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் கூறுகையில், ‘விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதற்கான அனைத்து தயாரிப்புகளுடனும் வந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு  வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை இங்கேயே இருந்து போராடுவோம். வேளாண் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எங்களது ஆட்சேபனைகளை இன்று எழுத்துப்பூர்வமாக தரவுள்ளோம். நாளை  மீண்டும் மத்திய அரசுடன்  நடக்கும் பேச்சுவார்த்தையின் போது, விரிவாக விவாதிக்கப்படும்’ என்றார்.

Related Stories: