அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.!!!

சென்னை: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தெற்கு அந்தமான் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வங்க கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, பாம்பனுக்கு 300 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. புரெவி புயலின் நகரும் வேகம் 25 கி.மீட்டரில் இருந்து 15 கி.மீட்டராக குறைந்துள்ளது. இலங்கையின் திரிகோணமலை அருகே இன்றிரவு  8.30 மணி அளவில் கரை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 4-ம் தேதி கன்னியாகுமரி-பாம்பன் இடையே புரெவி புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், பாம்பனில் 30 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசுகிறது. தூறல் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள 134 தீயணைப்பு வீரர்கள் தவிர மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவுள்ளனர்.

இந்நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். புரெவி புயல் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: