×

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கட்டாயம்: உடனடியாக அமைக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் சித்ரவதைகளை தடுக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) பொருத்த உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது. பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை தொடர்பான வழக்கில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின் போது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் குறித்த விபரங்களை அந்தந்த மாநில அரசின் வழக்கறிஞர்கள் எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்க இணைய வசதி அவசியமாகிறது. அங்குள்ள போலீஸ் நிலையங்களில் மின்சாரம், இணையவசதி வழங்குவதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘மாவட்டம் வாரியாக காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், அவை செயல்படுகின்றனவா? என்ற விவரம் வேண்டும். அதேபோல, கண்காணிப்பு கேமராக்களை யார் கண்காணித்து, போலீஸ் அத்துமீறல், அராஜகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பான விவரங்கள் வேண்டும் என தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் 45 நாட்களுக்கு மேல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதுதொடர்பான தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்’ எனவும் தெரிவித்தனர்.

மேலும் ஒலிப்பதிவுடனான கேமரா பொருத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் என்ன என கேள்வி எழுப்பியதோடு, இந்த அனைத்து கேள்விகளுக் கான பதிலை உள்ளடக்கி மேலதிக பரிந்துரைகளோடு கூடுதல் பிரமாணபத்திரத்தை தாக்கல்செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அனைத்து மாநில காவல் நிலையங்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டல், உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதனை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். வருகிற ஜன. 27ம் தேதிக்குள் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்திருக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்திருக்க வேண்டும். ஜன. 27ம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இடைப்பட்ட காலங்களில் கேமரா பொருத்துதல் செயல்பாடு குறித்து நீதிமன்றம் கண்காணிக்கும்’ என்று உத்தரவிட்டனர்.

Tags : police stations ,Supreme Court , Mandatory CCTV in all police stations: Supreme Court orders states to set up immediately
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...